மிளகாய் பொடி தூவி நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி… 50 பவுன் தங்க நகை, ரூ. 9 லட்சம் அபேஸ் ; 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!
Author: Babu Lakshmanan6 ஜனவரி 2024, 5:02 மணி
வேலூர் அருகே மிளகாய் பொடி தூவி நகைக் கடை ஊழியர்களிடம் 50 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரவாரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நகைக்கடைகளில் இருந்து நகைகளை வாங்கி வெவ்வேறு நகை கடைகளுக்கு கொண்டு சென்று வழங்குவதும், அதற்கான தொகையை வசூலிப்பதும் வழக்கம்.
இவர் குடியாத்தம் சந்தப்பேட்டை நகைக்கடை பஜார் பகுதியில் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் ரங்கநாதன் அவரது உறவினர் அன்பரசன் என்பவரை அழைத்துக் கொண்டு வழக்கம் போல், பரதராமி பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு சென்று, நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு, பரதராமில் இருந்து குடியாத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் இரவு புறப்பட்டனர்.
அப்பொழுது, குடியாத்தம் சித்தூர் சாலையில் குட்லவாரிபள்ளி அருகே சென்ற அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, அவர்களிடம் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்ச ரூபாய் ரொக்கம் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ரங்கநாதன் பரதராமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பரதராமி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். நகைக்கடை ஊழியர்களிடம் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 9 லட்ச ரூபாய் ரொக்கத்தை மர்ம கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0