ரூ.50 ஆயிரம் பணத்தை காட்டி பரிசு அறிவிப்பு… பாஜக வேட்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan31 March 2024, 1:32 pm
ரூ.50 ஆயிரம் பணத்தை காட்டி பரிசு அறிவிப்பு… பாஜக வேட்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று பொதுமக்களிடையே பேசிய திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்.பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார்?
உங்கள் குறைகளை எத்தனை முறை கேட்டறிந்தார்? எத்தனை குறைகளை நிறைவேற்றினார்? என்று கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வந்து எத்தனை பேர் கூறினாலும், அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக நமது வேட்பாளர் செந்தில்நாதன் அறிவிக்கிறார்.
அதற்காக கரூர் கட்சி அலுவலகத்தில் தனி கவுண்டர் போடப் போகிறோம். அங்கே வந்து நீங்கள் கூறினால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை ஆட்டிக்காண்பித்து பேசினார்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர் வடமதுரை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன், உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.