திமுக பிரமுகரை சுத்துப்போட்ட பெற்றோர்.. மதுரையில் மாடியில் இருந்து தவறிய மாணவன்!
Author: Hariharasudhan15 November 2024, 4:42 pm
மதுரை பழங்காநத்தம் பகுதியில் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை: மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், இன்று (நவ.15) பள்ளியின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அம்மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்த மாணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளார். மேலும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடைய, இது குறித்து அறிந்த மாணவரின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து தங்களுக்கு சரியாக தகவல் அளிக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர் சுதன் அங்கு வந்தார். அவரை சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், தங்களுக்கு முதலிலே தெரியப்படுத்தி இருந்தால், மிக விரைவில் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கலாம் என்றும், இதில் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கிண்டி மருத்துவமனையில் பறிபோன உயிர்.. கதறும் உறவினர்கள்!
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெற்றோர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.