திருவிழாவில் பெண்களை கேலி செய்ததை தட்டி கேட்ட காவலர் மீது தாக்குதல் ; ஆறு இளைஞர்களை கைது செய்தது போலீஸ்…!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 2:49 pm

கடலூர் ; வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் நடந்த தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் காவலரை தாக்கிய ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு 153வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பாண்டுரங்கன் மகன் ரமேஷ் (32) என்பவர் வடலூர் சத்திய ஞான சபை வீதியில் அமைந்துள்ள கல்பட்டு அய்யா நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சில இளைஞர்கள் பீப்பி ஊதிக் கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதனைக் கண்டு பணியில் இருந்த ரமேஷ் தட்டி கேட்ட போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ரமேஷை சரமாரியாக கழி, கட்டையை கொண்டு தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பலத்த காயம் அடைந்த ரமேஷை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவலரை தாக்கிய இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வடலூர் கோட்டை கரை பகுதியை சேர்ந்த ஜான் மகன் ராமலிங்கம் (18), கொள்ளுக்காரன் குட்டை அய்யாவு மகன் ரவி (23); வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் பரஞ்சோதி (23), அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் கௌரிசங்கர் (21), மணியரசன் மகன் சூரியகுமார் (22) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் 6 நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 1584

    1

    0