71 அடியில் நவகாளியம்மன்.. சிலிர்க்க வைத்த சிலை : கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பக்தி பரவசம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2023, 12:37 pm
சத்தியமங்கலம் அருகே 71 அடி உயரத்தில் நவகாளியம்மன் சிலை அமைக்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷே விழா.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள அணையப்பாளையம் பிரிவில் 71 அடி உயரத்தில் பத்து கைகளுடன் கூடிய நவகாளியம்மன் சிலை அமைக்கப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று அக்கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர், ஆதி கருப்பண்ண சுவாமி, காலபைரவர், முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டு திருக்கோவிலின் திருப்பணிகள் இந்த மாதம் நிறைவு பெற்றது.
இந்நிலையில் நேற்று கண்டிசாலை முனியப்பன் கோவிலில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் கோவிலின் முன்பு ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று காலை கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 71 அடி உயரம் உள்ள நவகாளியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் மேல் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.