ரவுடியின் வீட்டில் பதுங்கியிருந்த கூட்டாளிகள்…8 பேர் துப்பாக்கி முனையில் கைது: காஞ்சி போலீசார் அதிரடி ஆக்ஷன்..!!

Author: Rajesh
26 March 2022, 1:42 pm

காஞ்சி: பிரபல ரவுடியின் வீட்டில் தங்கியிருந்த அவனது கூட்டாளிகள் 8 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின் (36). இவன் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மேலும் இவன் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் லெனின் கூட்டாளியான நடுவீரப்பட்டு பகுதியை சார்ந்த நரேஷ் பாபு (26), சுரேஷ்பாபு (30), விக்னேஷ் (23), ஹரிகரன் (21), சென்னை டி.பி.,சத்திரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (24), மோகன் (24), ஜாபர்கான்பேட்டை விக்னேஷ் (18), பொத்தேரி சேர்ந்தவர் சந்துரு (27) ஆகிய 8 பேரும் குற்ற செயலில் ஈடுபட நடுவீரபட்டில் உள்ள லெனின் வீட்டில் பதுங்கி இருந்தனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி