கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து: 8,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி…2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்..!!
Author: Rajesh20 March 2022, 10:09 am
கோவை: அன்னூர் ஆம்போதி அருகே கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்தில் 8500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகின.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள ஆம்போதி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமாக 2 கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. 2 கோழிப்பண்ணை ஷெட்டுகளில் சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றியது.
இச்சம்பவம் குறித்து கணேஷ்குமார் அன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாயின.மேலும், இவ்விபத்தில் கோழித்தீவனங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.