கடவுள் உருவத்தில் ‘கமலாம்மா’…87 வயது மூதாட்டியின் நெகிழ வைத்த சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan15 November 2024, 9:36 am
கோவையைச் சேர்ந்தவர் 87 வயதான கமலா. இவர் கோவை நிர்மலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தவறி கீழே விழுந்ததில் கமலா அவர்களின் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தவர் கோவை கங்கா முதுகு தண்டு வட மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து தற்போது குணமடைந்து உள்ளார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற வந்து இருந்த பலர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை பார்த்து உள்ளார்.
இதை அடுத்து அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்ய முன் வந்த கமலா கங்கா முதுகு தண்டு வட மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வரும் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற தேவையான நவீன கருவிகள் வாங்க ரூபாய் 40 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.
பேராசிரியர் கமலாவின் சகோதரர் ரோட்டரி தலைவர் ராஜகோபால் கூறியதாவது :- எனது சகோதரி கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக குணமாகி வருகிறார்.
கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. என்பதை அறிந்தோம் அதற்கு எங்களுடைய உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு மருத்துவரை தொடர்பு கொண்டோம்
இதுபோல் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு நாங்கள் செய்த உதவி பேரு உதவியாக இருக்கும் என கமலாவின் சகோதரர் ராஜகோபால் தெரிவித்தார்.