எகிறி அடிக்கும் பெட்ரோல் விலை…டீசல் விலையும் இன்று உயர்வு: 9 நாட்களில் 8வது முறையாக அதிகரிப்பு..!!
Author: Rajesh30 March 2022, 8:22 am
சென்னை: கடந்த 9 நாட்களில் 8வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதற்கிடையில் ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நேரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலை அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளன. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 106.69 ஆகவும், டீசல் விலை ரூ.96.76 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.29, டீசல் விலை 5.33 விலை அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.