9ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை : காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்… தீவிரமடையும் விசாரணை..!!
Author: Babu Lakshmanan23 August 2022, 5:09 pm
திருவாரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் திருவள்ளூர் நகர சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 14 வயதில் சஞ்சய் என்கிற மகனும் ஐந்து வயதில் சுஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
சஞ்சய் பேரளத்தில் உள்ள சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தனது வகுப்பிலேயே இரண்டாவது ரேங் எடுத்து தேர்ச்சி பெரும் அளவிற்கு சஞ்சய் நன்றாக படிக்க கூடியவர் என்றும், பள்ளியில் சஞ்சய்க்கு அதிக எழுத்துப் பயிற்சி கொடுப்பதாகவும், மேலும் தனக்கு முன்பு மற்ற மாணவர்களை அடிப்பதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி வேறு பள்ளிக்கு மாற்றுமாறு தந்தையிடம் அடிக்கடி கூறிவந்துள்ளதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணுவ வீரரான வெங்கடேஷ் 15 நாட்களில் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். ஏற்கனவே, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் சஞ்சய், நேற்று வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற பெற்றோர் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, வெங்கடேசன் பேரளம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு முடிந்த உடன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பள்ளி தரப்பில் கேட்டபோது மாணவர் கடந்த மூன்று நாட்களாக விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். அதனால் எந்த காரணத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. அவர் ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கிறார். ஆகையால் அவருக்கு எந்தவித எழுத்து பயிற்சியோ, மன அழுத்தமோ பள்ளி தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளியில் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.