எலி பேஸ்ட் சாப்பிட்டு 9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி ; ஆதிதிராவிடர் நல விடுதியில் அதிர்ச்சி.. போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan14 April 2023, 3:55 pm
திண்டுக்கல் ; நத்தம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி எலி பேஸ்ட் தின்று தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் நத்தம் அருகே செந்துறை சின்னக்குளத்தை சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவி தங்கி நத்தம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த மாணவி கடந்த ஏப்.10 அன்று எலி பேஸ்டை தின்று தற்கொலை முயற்சி செய்துள்ளார். விஷம் தின்றது குறித்து மாணவி யாரிடமும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவியின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் இரு தினங்கள் கழித்து நேற்று முன்தினம் ஏப்.12 இரவு மாணவியின் பெற்றோர் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி விஷம் அருந்தியதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனை அடுத்து மாணவியை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
எதற்காக ஆதிதிராவிடர் விடுதியில் இருந்த மாணவி விஷம் அருந்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.