24 மணி நேரமும் வழிப்பறியில் ஈடுபட்ட 27 வயது இளைஞர் : போலீசார் வைத்த பொறியில் வசமாக சிக்கினான்!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2022, 7:10 pm
கோவையில் சைபர் குற்றங்கள் கஞ்சா விற்பனை வாகன திருட்டுவீடு புகுந்து கொள்ளை போன்ற குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் வழிப்பறி கொள்ளையர்களால் இரவு நேரங்களில் வேலை முடித்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த அச்சத்துடன் விழிப்புடன் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கோவையில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறிக் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பாக , பீளமேடு, சித்ரா, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி நகைகள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவிநாசி சாலை சித்ரா பகுதியில் கதிரவன் என்பவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5,400 பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கதிரவன் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்கு சென்ற பீளமேடு போலீசார் வழிப் பறியில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
வழிப்பறியில் ஈடுபட்டதாக பிடிபட்ட நபர் போலீசாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் உன்னி என்கிற மதுசூதனன் என்பது தெரியவந்தது.
வழிப்பறியில் ஈடுபட்ட உன்னி என்கிற மதுசூதனன் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 27 வயதான உன்னி எந்த வேலைக்கும் செல்லாமல் வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதே தனது முழு நேர தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவர் மீது ஏற்கனவே சரவணம்பட்டி, பீளமேடு காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு 10″க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது