அலட்சியத்தால் பறிபோன 6 வயது சிறுவனின் உயிர் : மூடப்படாத கழிவு நீர் தொட்டியால் வந்த வினை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2023, 11:03 am

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டுக்கு தண்ணீர் பிடிப்பதற்காக வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே குடிநீர் குழாய்க்கு சென்றார்.

பின்னர் மணிகண்டன் அங்குள்ள ஊராட்சி குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அருகே விளையாடிக்கொண்டிருந்த அவரது மகன் பிரதீப் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அக்கம் பக்கத்தில் பல இடங்களிலும் தேடி பார்த்தும் மகனை காணவில்லை. அப்போது தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்த குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியை எட்டி பார்த்தபோது, அதில் சிறுவன் பிரதீப் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகனை மீட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து சிறுவன் பலியான சம்பவத்தில் வெங்கடாபுரம், ஊராட்சிமன்ற செயலாளர், டேங்க் ஆபரேட்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 510

    0

    0