எலக்ட்ரானிக் மெக்கானிக் வீட்டில் நடந்த 9 மணி நேர சோதனை.. கிலோ கணக்கில் சிக்கிய பவுடர்? விசாரணையில் பரபர தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan23 February 2024, 8:38 am
எலக்ட்ரானிக் மெக்கானிக் வீட்டில் நடந்த 9 மணி நேர சோதனை.. கிலோ கணக்கில் சிக்கிய பவுடர்? விசாரணையில் பரபர தகவல்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி (59) இவர் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்துவருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாநகர் கே.கே.நகர் வித்யா காலனி அருகேயுள்ள அய்யனார்கோவில் 2 ஆவது தெரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்
இந்நிலையில் இவரது வீட்டில் உயர்தர போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் இரவு 7.30 மணிவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் மற்றும் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் பதுக்கலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து தமிம் அன்சாரியின் வீட்டிலிருந்து பவுடர் வடிவிலான சுமார் 10 கிலோ மதிப்பிலான யூரியா, அசிட்டோன், சோடியம்ஹைட்ராக்ஸைடு மற்றும் மெத்தாபெட்டமைன் ஆகியவை அடங்கிய பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்தும் மருத்துவ அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுசெய்த நிலையில் உரிய முடிவு தெரியவில்லை. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பவுடர் வடிவிலான மெத்தாபெட்டமைன் போதைப்பொருள் உள்ளதா அல்லது வேறு வகையான போதைப்பொருள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பறிமுதல் செய்யப்பட்ட மாதிரியானது சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவின் அடிப்படையில் தமிம் அன்சாரியிடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் தமீம் அன்சாரியின் வீட்டில் சென்னையைச் சேர்ந்த அன்பு என்ற நண்பர் மதுரைக்கு வந்தபோது அட்டைப்பெட்டி ஒன்றை ரசாயனப்பொருள் என கூறி வைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அன்பு என்பவரிடம் விசாரணை நடத்தவும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்
இந்த பதுக்கல் சம்பவத்தில் தமிம் அன்சாரிக்கு தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தவதற்காக அவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.