இறந்தநாளாக மாறிய பிறந்தநாள்… நள்ளிரவில் இளைஞர் கொலை.. மெரினாவில் அரங்கேறிய பயங்கரம்!!!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2023, 5:07 pm
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் பொதுமக்கள் வாக்கிங் செல்வது வழக்கம். அங்குள்ள பொது பணித்துறை அலுவலகம் எதிரே இன்று அதிகாலை பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது சாலையில் மூன்று இளைஞர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 3 பேரை மருத்துவர்கள் பரிசோதித்த போது ஒருவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனையடுத்து அண்ணாசதுக்கம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் ஆவடியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பதும் படுகாயமடைந்த நபர்கள் அரவிந்தன் (வயது 22) மற்றும் சஞ்சய் (வயது 18) என்பதும் தெரியவந்தது.
மேலும் நேற்று சஞ்சய்க்கு பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட நேற்றிரவு அவரது நண்பர்களான விக்னேஷ், அரவிந்தன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று அனைவரும் மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீட்டிற்கு செல்ல வேண்டி புறப்பட்டு சென்றுள்ளார்கள்.
அப்போது சர்வீஸ் சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே விக்னேஷ் தனது ஹெல்மெட்டை வைத்துவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது ஹெல்மெட்டை காணவில்லை .
இதனால் அதை அவர் தேடிவந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அங்கிருந்த கடை ஊழியர்கள் சிலர் கடையை உடைத்து திருட வந்திருப்பதாக நினைத்துள்ளனர். அத்துடன், விக்னேஷ், சஞ்சய், அரவிந்த் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த கடை ஊழியர்கள் அங்கிருந்த கட்டையால் விக்னேஷ், சஞ்சய் மற்றும் அரவிந்தன் ஆகியோரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் மூவரும் படுகாயமடைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடை ஊழியர்கள் மூன்று பேரை பிடித்து அண்ணாசதுக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நள்ளிரவில் மெரினாவில் பிறந்த நாள் கொண்டாடச் சென்ற இடத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.