பல்லடத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. தம்பதி சடலமாக மீட்பு!
Author: Hariharasudhan10 December 2024, 2:10 pm
திருப்பூர், பல்லடம் அருகே தம்பதி தங்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலம்பரசன் – அகிலாண்டேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன், கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சின்னக்கரை, லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்தனர்.
சிலம்பரசன், அதே பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில், இன்று (டிச.10) காலை சிலம்பரசன் – அகிலாண்டேஸ்வரி தம்பதி இறந்து கிடப்பதாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது, சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டது போன்ற நிலையிலும், அகிலாண்டேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்து உள்ளனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா, என்ன காரணம், அவர்களது குழந்தைகளின் நிலை என்ன என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிதறிக் கிடந்த உடல்.. இளைஞர் கொடூர கொலை : போதையால் கொலை நகரமாகும் தலைநகராம்!!
காரணம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான். பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் தங்களது தோட்டத்து வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே பல்லடம் பகுதியில் தம்பதி வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.