திடீர் தற்கொலை செய்த தந்தை… வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீத சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2023, 9:51 pm
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப சுமை மற்றும் பிரச்சனை காரணமாகவும் மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
தனது தந்தையின் நினைவாகவே இருந்து வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கீர்த்தி சென்னை மாதவரத்தில் உள்ள அகர்சன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கிரிமினாலஜி படித்து வந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை கீர்த்தியின் அம்மா தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று விட கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தி யாரிடமும் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டில் இருந்த மின்விசிறியில் புடவைகளை கொண்டு தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை அடுத்து இவரை வழக்கமாக கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் இவரது ஆண் நண்பர் சாம் குமார் என்பவர் இன்று வந்து பார்த்தபோது கீர்த்தி வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்தவர்களை துணைக் கொண்டு பாடியநல்லூர் ரீலா என்கின்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை மருத்துவர்களிடம் காண்பித்துள்ளனர்.
அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் அளிக்க இதனை அடுத்து இது குறித்து சென்னை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தகவலை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்த செங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சனையில் தந்தை இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.