‘கலர் ஜெராக்ஸ் மிஷின் …கொஞ்சம் இங்க் போதும்’: வீட்டில் வைத்து கள்ளநோட்டு பிரிண்ட்…போலீசில் சிக்கிய கும்பலின் பின்னணி…!!
Author: Rajesh12 ஏப்ரல் 2022, 3:33 மணி
சென்னை: மணலி புதுநகரில் வீடு ஒன்றில் கலர் பிரிண்டர் மூலம் 200 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதற்காக பிரிண்ட் செய்து வைத்திருந்த 12 லட்ச ரூபாய் பறிமுதல் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அக்கம்பக்கத்தினர் மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளது.
உடனே அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது கட்டு கட்டாக 200 ரூபாய் நோட்டுகளும் அதன் பக்கத்திலேயே கலர் ஜெராக்ஸ் எடுக்கும் மிஷின்களும் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த அந்த ஆறு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் மணலி புது நகரை சேர்ந்தவர் யுவராஜ் (37), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்( 33), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்இம்தியாஸ்(24), திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜோசப் (31), வியாசர்பாடி சேர்ந்தவர் ரசூல்கான் (38), செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (38) இவர்கள் 6 பேரும் நண்பர்கள்.
ரசூல்கான் ஆலோசனையின் பேரில் கள்ளநோட்டு தயாரிக்க யுவராஜ் மற்றும் சக நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டனர். இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணலி புதுநகரில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தனர். 2 கலர் ஜெராக்ஸ் மிஷின்கள் மற்றும் தரமான வெள்ளைக் காகிதத்தை வாங்கியுள்ளனர்.
அதனைக் கொண்டு 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அதை புறநகர் பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 200 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு பிரிண்ட் செய்ய வேண்டுமென்று யுவராஜ் கூறியுள்ளார். அதற்கு 500 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் எடுத்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என ரசூல் தெரிவித்துள்ளார்.
இதனால் யுவராஜ்க்கும் ரஸூலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதை மற்றவர்கள் சமாதானம் செய்ய அங்கு இங்கும் நடமாடியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அங்கு அச்சடித்து வைத்திருந்த 12 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் வெள்ளை பேப்பர் பண்டல்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் முழுமையாக விசாரித்தால் தான் எவ்வளவு கள்ளநோட்டு ரூபாய் புழக்கத்தில் விட்டார்கள், இவர்களுக்கு பின்னால் யார்,யார் இருக்கிறார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
0
0