கமுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்த மணல் லாரி…56 ஆடுகள் பலி: நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!!
Author: Rajesh23 January 2022, 9:20 am
ராமநாதபுரம்: கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டு மந்தைக்கு புகுந்ததால் 56 ஆடுகள் பலியாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முனியசாமி மற்றும் நாகராஜ். இவர்கள் 2 பேரும் 130க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு கமுதி – அருப்புக்கோட்டை சாலையில் காவடிபட்டி அருகே கிடையில் அடைப்பதற்காக ஆடுகளை கொண்டு சென்றனர். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து கமுதிக்கு எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டு மந்தைக்குள் புகுந்தது.
லாரி மீது மோதியதில் 56 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது. மேலும், ஆடுகளை மேய்த்த நாகராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிலைகுலைந்த லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதுகுறித்து கமுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி ஆடுகளின் உரிமையாளர் முனியசாமி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். லாரி மோதி 56 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.