பிரசவத்திற்காக வந்த கணவர்.. சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. சிவகங்கையில் திடுக்கிடும் சம்பவம்!

Author: Hariharasudhan
26 October 2024, 1:48 pm

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியைச் சேர்ந்தவரான பால்சாமி. 72 வயதான இவர், தற்போது சிவகங்கை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (அக்.24) காலை 8 மணி அளவில், கல்குளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த பாசனக் கிணற்றில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடல் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து உடனடியாக தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா போலீசார், தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். அப்போதுதான், அவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி என போலீசார் கூறி உள்ளனர். பின்னர், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட சிறுமியின் வலது கை உடைந்த நிலையிலும், தலையில் காயங்கள் உடனும், ஆடைகள் கிழிந்தும் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி, முதலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு வயது 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் தாயார் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு, மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மனைவியும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தை இறந்துள்ளது. எனவே, மற்றொரு குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்து உள்ளார்.

அப்போது, இவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிறுமியை அழைத்துக் கொண்டு கல்குளம் அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். பின்னர், இது குறித்து உனது தாயிடம் தெரிவிக்கக் கூடாது எனக் கூறி இருக்கிறார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், சிறுமியை கொடூரமாகக் கொலை செய்து அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் வீசி விட்டு தப்பிச் சென்று உள்ளார். மேலும், சிறுமி மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உடன் சிறுமி இருந்ததை போலீசார் முதலில் கண்டுபிடித்து உள்ளனர். இதனை வைத்து மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவம் வெளி வந்து இருக்கிறது.

இதையும் படிங்க : தம்பியால் அண்ணனை விளாசும் நெட்டிசன்கள்.. தவெக மாநாட்டில் அஜித்!

இந்த நிலையில், அந்த இளைஞரைக் கைது செய்த சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டு உள்ள நபர், ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும், அதில் அவர் 8 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 232

    0

    0