சோளக்காட்டில் குடித்துக் கொண்டிருந்த நபர்.. சின்னசேலம் பாலியல் வன்கொடுமையில் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan2 January 2025, 6:46 pm
கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மேலும், கணவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்.
எனவே, அப்பெண் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் மாலை நேரத்தில், அருகில் உள்ள ஒரு பகுதியில் உள்ள பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை ஊற்றி விட்டு, வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதேநேரம், அவரது தம்பி, வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் அவர் பால் ஊற்றி வந்த பால் கேன்கள் மற்றும் காய்கறிகள், துப்பட்டா ஆகியவை சிதறிக் கிடந்துள்ளது. மேலும், அதிலிருந்து சற்று தூரத்தில் தனது அக்கா இறந்து கிடந்ததைக் கண்டு அவர் கதறி அழுதுள்ளார்.
பின்னர், இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில், சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.இவ்வாறு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், ஒரு வாரமாகியும் இதற்கான விடை தெரியவில்லை என எதிர்கட்சிகள் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கின.
இதையும் படிங்க: Spray வச்சிக்கோங்க.. தமிழகத்தில் இப்படியொரு நிலையா? இபிஎஸ் கடும் விமர்சனம்!
இதனைத் தொடர்ந்து, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், குமரேசன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சின்னசேலம் நைனார்பாளையம் பகுதியில் டீக்கடையில் வேலை செய்து வந்த குமரேசன், சம்பவத்தின் போது காட்டுவழிப் பகுதியில் மதுபோதையில் இருந்துள்ளார்.
அப்போது பால் ஊற்றுவதற்காக வந்த அப்பெண்ணை அடித்து, சோளக்காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், மயக்கமான நிலையில் இருந்த அப்பெண், நடந்ததை வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.