OMR சாலையில் மீண்டும் கல்லூரி மாணவர்களால் பறிபோன உயிர்.. எப்படி நடந்தது?
Author: Hariharasudhan21 February 2025, 12:58 pm
சென்னை அடுத்த ஓஎம்ஆர் சாலையில், கல்லூரி மாணவிகள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானத்தில் பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக, ஆலத்தூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓஎம்ஆர் சாலையில் திருப்போரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து அதிவேகமாக வந்த கல்லூரி மாணவி ஓட்டி வந்த கார், தண்டலம் அருகே உள்ள சிறிய வளைவில் திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி, முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில், அங்கிருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு கார் விவசாய நிலத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது.
அதேநேரம், இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ்குமார் மீது மோதியதில், அவர் உடல் நசுங்கி 100 அடி தூரத்திற்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவி, அவருடன் இருந்த ஹேமலதா, ஸ்வேதா, சவிதா, ஷாகித் மற்றும் தனுஷ் ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து, இவர்கள் ஆறு பேரும் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உணவுத் தொழில் நுட்பப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில், கல்லூரி முடிந்து மாமல்லபுரம் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பியபோது, இந்த விபத்து நேரிட்டது தெரிய வந்தது.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த சுரேஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ஓஎம்ஆர் சாலையின் நடுவே சடலத்தை வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த திருப்போரூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலைக் கலைத்தனர்.
இதையும் படிங்க: பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி.. 30 வயது நபரால் பாலியல் தொல்லை.. மதுரையில் அதிர்ச்சி!
இதனையடுத்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ஆறு மாணவ, மாணவிகளும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பண்டிதமேடு கிராமத்தில் சாலை ஓரமாக அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர்கள் மீது கல்லூரி மாணவர்களின் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.