Camp Fireல் மனித எலும்புகள்.. மதுரைக்கு வந்த Call.. கொடைக்கானல் திகில் சம்பவம்!
Author: Hariharasudhan27 March 2025, 11:50 am
கொடைக்கானல் விடுதியில் நண்பர்கள் சேர்ந்து சக தோழரைக் கொன்று கேம்ப் ஃபயரில் போட்டு எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் குருசடி மெத்து அருகே ஒருவரை எரித்துக் கொன்றதாக மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இது குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நேற்று கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தங்கும் விடுதி வளகாத்தில் உள்ள கேம்ப் ஃபயர் போடப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம், விடுதி வளாகத்தைச் சுற்றி நடத்தப்பட்ட சோதனையில், எரிந்த நிலையில் ஆண் தலை மற்றும் மார்புப் பகுதி மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உடல் பாகங்களை மீட்ட போலீசார், அவற்றை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விடுதியின் உரிமையாளர் கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் காணவில்லை என உறவினர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

எனவே, இந்த தங்கும் விடுதியின் உரிமையாளர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல், மதுரை போலீசில் தகவல் தெரிவித்த நபரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
இதன்படி, கொலை செய்யப்பட்ட நபர் சிவராஜ் என்பதும், அவரை அவரது நண்பர்களேக் கொலை செய்து எரித்ததும் தெரிய வந்துள்ளது. அதாவது, கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவராஜ் (60). இவர் பல மாதங்களாக மது போதைக்கு அடிமையாக இருந்ததால், மதுரையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், மீண்டும் சொந்த ஊரான கொடைக்கானலுக்கு வந்துள்ளார். இதனிடையே, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றபோது சிவராஜுக்கு, உடன் சிகிச்சை பெற்ற மதுரை தத்தனேரியைச் சேர்ந்த மணிகண்டன், அருண், ஜோசப், சந்தோஷ் மற்றும் நாகசரத் ஆகியோருக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இவர்கள் சிகிச்சை முடிந்து வெளியே வந்த பின்பும் அடிக்கடி சேர்ந்து மது குடித்து வந்ததாகத் தெரிகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் 20ஆம் தேதி சிவராஜ் காட்டேஜில், 6 பேரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய சிவராஜ், மற்ற 5 பேரிடமும் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன், மதுபாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த கேம்ப் ஃபயரில் வைத்து டீசல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை, சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்து விட்டு தப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: புஸ்ஸிக்குத் தெரிந்தே பணம் கைமாற்றம்.. கொதிக்கும் விழுப்புரம் தவெக.. நடந்தது என்ன?
இதனையடுத்து, சிவராஜ் மாயமானது குறித்து அவரது தங்கை அளித்த புகாரின்படி கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, மணிகண்டன் நேற்று சிகிச்சை பெற்ற மறுவாழ்வு மையத்திற்குச் சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
உடனடியாக அந்த நிர்வாகி மதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் மணிகண்டனைக் கைது செய்து கொடைக்கானல் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.