மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர்; கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சனை.. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
26 November 2022, 11:33 am

புதுக்கோட்டை ; கந்தர்வக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவராஜ். இவரது மகள் லதாவை அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ரவிச்சந்திரன் ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில், ரவிச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது மனைவி லதா தற்போது தந்தை சைவராஜ் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கிடையே புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவரது இரண்டு பெண் குழந்தைகளும், மனைவி லதாவின் பராமரிப்பில் இருக்க நீதிபதி உத்தரவிட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக ரவிச்சந்திரன் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு ஆத்திரத்தில் கந்தர்வகோட்டை திரும்பினார்.

மாமனார் ஊரான வடுகப்பட்டிக்கு ரவிச்சந்திரன் செல்லும் போது, அங்கு மாமனார் குடும்பத்தாரிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மைத்துனர் உட்பட அனைவருக்கும் கைகலப்பு நடந்துள்ளது.

அப்போது, தான் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து மாமனார் சைவராஜை ரவிச்சந்திரன் சுட்டுக்கொலை செய்துள்ளார். இதை தடுக்க வந்த மைத்துனர் முருகேசனை துப்பாக்கி கட்டையால் திருப்பி தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும், இதனை தொடர்ந்து இறந்த சைவராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!