40 வயது நபர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி : கயிறு கட்டி கீழே இழுத்து வந்த தீயணைப்பு துறையினர்..!!
Author: Babu Lakshmanan25 December 2023, 1:50 pm
கரூரில் நிலப் பிரச்சினை காரணமாக 40 வயது நபர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சித்த நபரை தீயணைப்பு துறையினர் வலுக்கட்டாயமாக இடுப்பில் கயிரை கட்டி கீழே இழுத்து வந்ததால் பரபரப்பு நிலவியது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 45). இவர் தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இப் பிரச்சனை தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.
புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காலை சுமார் 8.00 மணியளவில் ராமானுஜம் நகரில் ரிலையன்ஸ்க்கு சொந்தமான 80 அடி உயர செல்போன் டவரில் சுமார் 15 அடி உயரத்தில் ஏறிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.
தகவல் அறிந்த அங்கு வந்த தீயணைப்பு துறையினரும், அவரின் உறவினர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் கீழே இறங்கி வர மறுத்ததால் தீயணைப்பு துறை வீரர்கள் ஏணியை போட்டு ஏறி அவரின் இடுப்பில் கயிற்றை கட்டி வலுக்கட்டாயமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் காரணபாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.