பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!
Author: Hariharasudhan26 March 2025, 6:52 pm
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை பின்புறமாக மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் பணி முடிந்த பெண் பயிற்சி மருத்துவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த மர்ம நபர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவர் கூச்சலிட்டுள்ளார். மேலும், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பணியாளர் ஒருவரின் கணவர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.
அதோடு, அங்கு தெருவிளக்குகள் இல்லாததால் தப்பியோடிய அவரை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் நேற்று காலை பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவமனை உள்பகுதி வழியாக விடுதிக்குச் செல்லும் பாதை இரவு நேரங்களில் மூடப்படுகிறது, அதனைத் திறந்துவிட வேண்டும், மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பழுதான சிசிடிவி கேமராக்களை சீரமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கல்லூரி டீன் சத்தியபாமாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கலைக்கதிரவன், பிரான்சிஸ், டிஎஸ்பி அமலஅட்வின் மற்றும் சிவகங்கை நகர் போலீசார் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!
இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குச் சென்றனர். இதனிடையே, புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விடுதியில் தங்கியுள்ளவர்கள், மருத்துவமனை அருகே தங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் இது குறித்து கல்லூரி டீன் சத்தியபாமா கூறுகையில், “இரவில் பணி முடித்து விடுதிக்குச் சென்றபோது தன்னை மர்மநபர் தாக்கியதாக பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் புகார் அளித்தார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் கொடுத்துள்ளோம். எனவே, அவர்கள் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், பெண் மருத்துவருக்கு காயம் ஏற்படவில்லை. அவர் நலமுடன் உள்ளார்” என்றார்.