குடியரசு தின பதக்கம் பெற்ற காவலர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!
Author: Hariharasudhan29 December 2024, 12:13 pm
சேலத்தில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட முதல்நிலைக் காவலர் கலையரசனை சஸ்பெண்ட் செய்து அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டு உள்ளார்.
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் குற்றப் பிரிவில் முதல்நிலை காவலராக கலையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு, சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண்ணிடம் பேசிய காவலர் கலையரசன், திடீரென அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக காவலர் கலையரசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கலையரசனைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில், கலையரசனை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், சிறப்பான பணிக்காக கடந்த ஆண்டு குடியரசு தின பதக்கம் மற்றும் சான்றிதழையும் கலையரசன் பெற்றிருந்தார்.
ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்: முன்னதாக, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மோகன்ராஜ் (53), காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது சிசிடிவி மூலம் நிரூபணமானது.
இதையும் படிங்க: யார் அந்த SIR? தலைநகரைத் திணறடித்த அதிமுக.. முக்கியமான விஷயமும் இருக்கு!
இதனையடுத்து, பணியில் இருந்த பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றது, பணியின்போது மது அருந்தியது ஆகிய காரணங்களுக்காக SSI மோகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். அது மட்டுமின்றி, மோகன்ராஜ் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.