இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு.. இளைஞரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம் ; சிக்கிய கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 6:12 pm

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

2-வது மகன் சஞ்சய் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜீவா விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி மகனை காணவில்லை என சுந்தரவள்ளி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தொழிற்பேட்டை சிட்கோ தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள, கைவிடப்பட்ட பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முட்புதரில், ஜீவாவை கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன் பேரில் கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, கரூர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் தாந்தோணிமலை போலீசார் ஜீவாவின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஜீவாவின் உடலை தோண்டி எடுக்கும் போது கை, கால்கள், உடல் என ஆறு துண்டுகளாக வெட்டி கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜீவாவை திட்டமிட்டு கொலை செய்த வடக்கு காந்திகிராமம், EB காலனியை சேர்ந்த சசிகுமார் உள்ளிட்ட 9 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 பேரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து கொலை நடந்த இடம் குறித்து அடையாளம் காட்டியுள்ளனர்.

மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சசிகுமாரின் தலையை சிதைத்து விடுவேன் என்று பதிவிட்டதாகவும், ஏற்கனவே இருவருக்கும் இருந்த முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், ஜீவாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மகன் கொலை செய்யப்பட்ட இடத்தை கண்டதும் தாய் சுந்தரவல்லி கதறி அழுத நிலையில், அவரை உள்ளே அனுப்பாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே அமர வைத்தனர்.

சம்பவ இடத்தில் உடற்கூறு ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், கொலை செய்த சசிகுமார் உள்ளிட்டோரை காவல் நிலையத்தில் வைத்து, ஜீவாவை கொடூரமாக கொலை செய்ததற்கான பின்னணி குறித்து போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?