பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி.. சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள் : வழியில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 6:31 pm

கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அட்டவளை பாரதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் மக்களுக்கு நகர் புறத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இரண்டு கிலோமீட்டர் ஒத்தையடி பாதையை பயன்படுத்த வேண்டும். இதனிடையே இன்று பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த செளமியா (23) என்ற நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு ஒற்றையடி பாதையில் சென்றனர். செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது சிறிது நேரத்தில் பிறந்த குழந்தையும் இறந்தது.

பின்பு உடனடியாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கர்ப்பிணி மற்றும் குழந்தை விரைவாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

நீண்டகாலமாக பாரதிநகர் பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோரிக்கை வைத்து வருவதாகவும் இதுநாள் வரையில் தங்களுக்கான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கோத்தகிரியை சுற்றியுள்ள பல கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் அவசர மருத்துவ தேவைகளுக்காக செல்ல முடியாத நிலை தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வட்டப்பாறை கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நோயாளியை கிராம மக்களே தொட்டில் கட்டி கரடு முரடான தேயிலை தோட்டங்கள் வழியாக தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறி வருவது தொடர்கதையாகியுள்ளது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!