ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த பிரதமருக்கு என் உள்ளர்த்தம் புரியும் : முதலமைச்சர் ஸ்டாலின்!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2023, 9:21 pm
பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயரிலான பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முனையக் கட்டடம், சென்னை, கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் வந்துள்ளார்.
பிரதமர் இன்று துவக்கி வைத்துள்ள வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை வழங்க வேண்டும்.
டிக்கெட் கட்டணத்தை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வண்ணம் குறைக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு பல ஆண்டுகளாக ரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் ரயில்வே வரவு செலவு திட்டத்தில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் திட்டங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிறைவேறாத நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிப்பதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியையும் உயர்த்தி அளிக்க வேண்டும்.
ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை அண்ணாவும் கலைஞரும் வலியுறுத்தினார்கள்.
பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளர்த்தத்தை உணருவார் என நம்புகிறேன் எனக் கூறினார்.