சாமியாரை சிக்க வைக்க இளம்பெண் போட்ட ஸ்கெட்ச்… போலீசார் விசாரணையில் அம்பலமான ரிவேஞ்ச் நாடகம்..!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 2:08 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமியார் மீது பாம்பு முத்து மோசடி புகார் இளம்பெண் கொடுத்த புகாரில், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் திருமணம் ஆகாத நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள குளத்தின் கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிறிய அளவில் நாகராஜா கோயில் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்துள்ளார்.

இவரது கோயிலுக்கு அக்கம்பக்கத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. சுரேஷ்குமாரும் குறி சொல்வது பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க பூஜை பரிகாரங்களையும், ஒரு சாமியார் போல் இருந்து செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த கோயிலுக்கு வரும் 25 வயது இளம்பெண் ஒருவர், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், “நான் ஒரு நாக அவதாரம் என கூறி பல லட்சம் மதிப்புள்ள பாம்பு முத்துக்கள் நவரத்தின கற்கள் தன்னிடம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, போலி கற்களை கொடுத்து ஏமாற்றி வருவதாகவும், தன்னிடமும் லட்ச கணக்கில் பணம், விலையுயர்ந்த வாட்ச்களை பெற்றுக்கொண்டு போலி கற்களை தந்து ஏமாற்றி விட்டதாக சாமியார் சுரேஷ்குமார் மீது புகார் கூறியுள்ளார்.

எனவே, சாமியார் சுரேஷ்குமார் மீதும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அசோக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆண்லைன் மூலம் புகாரளித்தார். இந்த மோசடி சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் கண்காணிப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாமியார் சுரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தனிப்படை போலீசார் சாமியார் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சாமியார் மீது மோசடி புகாரளித்த தம்மத்து கோணத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் சனத் மற்றும் குடும்பத்தினருடன் சுரேஷ்குமார் நடத்தும் கோயிலுக்கு வந்து செல்வதும், அந்த நாகராஜா கோயிலில் சனத்தும் சாமியாடி குறி சொல்லி வந்த நிலையில், இரு குடும்பத்தினரும் குடும்ப நண்பர்களாக மாறி ஒன்றாக கோயிலை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், கப்பலில் பணியாற்றும் சனத் ஒரு கட்டத்தில் வீடு கட்டுவதற்கு சுரேஷ்குமாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றதும் தெரியவந்தது. கடந்த டிசம்பர் மாதம் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவின் போது, சுரேஷ்குமாருக்கும், சனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சுரேஷ்குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை சனத்திடம் திரும்ப கேட்டதோடு, இருவரும் பரஸ்பரம் ஒருவொருக்கு ஒருவர் பரிமாறிய பரிசு பொருட்களை திரும்ப கொடுத்துள்ளனர்.

ஆனால், சனத் தான் வாங்கிய கடன் தொகையை சுரேஷ்குமாருக்கு சரிவர திரும்ப கொடுக்காமல், இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், சனத் சுரேஷ்குமாரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு யுவர் கவுண்டவுண் ஸ்டார்ட் நவ் என மேசேஜ் அனுப்பியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, அந்த இளம்பெண்ணையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில், போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சாமியர் சுரேஷ்குமார் கூறிய தகவல்கள் உண்மை என்பது தெரிய வந்தது.

கணவர் வாங்கி கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால், அவரை ஏதாவது வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என இருவரும் திட்டம் தீட்டி, சாமியார் மீது பாம்பு முத்து மோசடி புகாரளித்தால், எளிதாக சிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில், ஆன்லைன் புகாரளித்து அதை பத்திரிகைகளுக்கு கொடுத்து விளம்பரப்படுத்தியதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த இளம்பெண்ணை இரணியல் போலீசார், எதிர்கால நலன் கருதி எச்சரித்து மேல் நடவடிக்கை தேவையில்லை என எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து சாமியாரை கைது செய்து மோசடி வழக்கை விசாரித்த குளச்சல் டி.எஸ்.பி தங்கராமனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, இளம்பெண் கொடுத்த புகாரில் உள்ள மோசடி குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் இல்லை எனவும், அதனால் சாமியார் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடுவித்துள்ளதாகவும், இளம்பெண்ணை விசாரித்து அனுப்பி வைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்

கொடுத்த கடனை திருப்பி கேட்ட சாமியாரை சிக்க வைக்க இளம்பெண் பாம்பு முத்து மோசடி புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 583

    2

    0