திமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்படும் அசைவ உணகத்தில் கெட்டுப்போன சிக்கன் : தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு மிரட்டல்!
Author: Udayachandran RadhaKrishnan5 July 2024, 4:59 pm
திண்டுக்கல் திருச்சி ரோடு, கரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் “கோல்ட் ஸ்டார்” என்ற பெயரில் அசைவ உணவகம் செயல் பட்டு வருகிறது.
இந்த அசைவ உணவகத்திற்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார்.
அவருக்கு உணவகத்தின் ஊழியர்கள் பிரியாணி மற்றும் சிக்கனை சப்ளை செய்துள்ளனர். ஆனால் அவருக்கு சப்ளை செய்யப்பட்ட சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசவே அவருக்கு சப்ளை செய்த ஊழியரிடம் இது பற்றி கேட்டுள்ளார்
அவர்கள் பதில் எதுவும் கூறாத காரணத்தினால் நவீன், சமையல் அறைக்குள் உள்ளே நுழைந்து பார்த்த பொழுது முதல் நாள் சமைத்து வைத்து விற்பனையாகாத சிக்கனை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சுட வைத்து கொடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நவீன் அங்கிருந்த நபர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. இதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் நவீன் புகார் தெரிவித்தார்.
மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போதிலும் ஆளும் கட்சி பிரமுகர் ஆதரவில் நடந்து வரும் உணவு விடுதி என்பதால் அவர்களும் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை
மேலும் இது பற்றி தகவல் அறிந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்கள் புகார் கொடுத்த நவீனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளனர்.
இருப்பினும் நவீன் தான் பாதிக்கப்பட்டது போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்து வருகிறார்.