நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3வது மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவி : திருப்பூர் அருகே பரபரப்பு… போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan1 November 2022, 6:07 pm
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலையில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது.
இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு திருப்பூர் அடுத்த படியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் ஆனந்தி (வயது 17) என்ற பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த மாணவி ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவியை காண அவரது காதலன் வந்துள்ளார்.
அதே சமயத்தில் பயிற்சி வகுப்பில் இருந்து மகளை அழைத்து செல்வதற்காக ஆனந்தியின் தந்தை மணிகண்டன் அங்கு வந்துள்ளார். அப்பொழுது இவர்களது காதல் விவகாரம் குறித்து அவருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து மகளை மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆனந்தி பயிற்சி வகுப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து இருக்கிறார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஏராளமான ரத்தம் வீணானது. வலியில் அவரும் அலறி துடித்து இருக்கிறார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.