பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : திருப்பூர் ஏடிஎஸ்பிக்கு கோர்ட் போட்ட உத்தரவு!!!
Author: Udayachandran RadhaKrishnan28 June 2023, 5:58 pm
நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்த பெருங்கரை உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் நாகேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு வழக்கு விசாரணையின் போது ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சாட்சிகள் விசாரணை முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்காமல் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இருந்துள்ளார்.
கிருஷ்ணசாமி தற்போது திருப்பூர் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆனால் அவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.