பீரோவுக்கு அடியில் கிடந்த கட்டப்பை.. ரத்தப்போக்குடன் கிடந்த மகள்.. அடுத்து நடந்த திருப்பம்!
Author: Hariharasudhan17 January 2025, 3:57 pm
சேலத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் அதிக ரத்தப்போக்குடன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்: சேலம் மாவட்டம், வாய்க்கால்பட்டறையில் தமிழ்ச்செல்வன் – ஜோதி தம்பதி வசித்து வந்தனர். இதில், தமிழ்ச்செல்வன் தச்சு வேலை செய்து வந்தார். மேலும், இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ள நிலையில், 4வது முறையாக ஜோதி கர்ப்பம் தரித்துள்ளார்.இதனையடுத்து, சமீபத்தில் ஜோதி அவரது தாய் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், 7 மாதமான பிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது, அவரது கணவருக்கு தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜோதியின் பெற்றோருக்கு, தனது மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியாமலே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. இதில் பிறந்த பெண் குழந்தை இறந்த நிலையில், அதனை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், ரத்த வெள்ளத்தில் ஜோதி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், தனது மகளுக்கு பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கு என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தை எங்கே என்று தேடிப் பார்த்த போது, பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைப் பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: அது எனக்கு கெளரவம்.. பாலையா சர்ச்சை நடனம் குறித்து ஊர்வசி ரவுத்தெலா விளக்கம்!
பின்னர், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.