ஸ்கூட்டியில் சென்ற பெண்.. நண்பனுக்கு அழைப்பு.. இறுதியில் நடந்த துயரம்!

Author: Hariharasudhan
4 January 2025, 6:14 pm

கிருஷ்ணகிரியில், பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரைச் சேர்ந்தவர்கள் மாதேஷ் – தீபா (32) தம்பதி. இந்த தம்பதிக்கு கவுசிக்தரன் (12) என்ற மகனும், ஷிவானி (10) என்ற மகளும் உள்ளனர். இதில், தீபா, போச்சம்பள்ளியில் உள்ள தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் கேண்டீனில் பணியாற்றி வந்தார்.

மேலும், கணவர் மாதேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தீபா வேலையை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் தீபாவை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த தீபா, தனது நண்பரான பள்ள சூளக்கரையைச் சேர்ந்த கவுதம் (22) என்பவருக்கு போனில் அழைத்து, பின் தொடர்வது குறித்து கூறியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது கவுதம், நான் உன்னுடைய பின்னாலே வருகிறேன் என்றும், அதனால் நீ பயப்படாமல் செல் என்றும் அந்த பெண்ணிடம் கூறியதாகத் தெரிகிறது.

Woman murder in Uthangarai

எனவே, தீபா ஸ்கூட்டரில் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, தீபாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கஞ்சனூர் முருகன் கோயில் அருகே வழிமறித்து, அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தீபா சரிந்து விழுந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். இதனையடுத்து, சிறிது நேரத்தில் தீபாவின் செல்போனில் இருந்து கவுதமிற்கு போன் வந்துள்ளது. அப்போது தீபா, தன்னை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டதாக கூறி அலறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், அங்கு வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அறநிலையத்துறைக்கு ‘இதில்’ தான் கவனம்.. தென்காசி கோயில் முன்பு பற்றி எரிந்த தீ!

இதனையடுத்து, படுகாயங்களுடன் கிடந்த தீபாவை மீட்ட கவுதம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கவுதமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், தீபாவின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக யாரெல்லாம் பேசினார்கள் என்றும், அவரது ஸ்கூட்டரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்தும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 83

    0

    0

    Leave a Reply