மாமூல் தர மாட்டியா? பெண் பழ வியாபாரி கொடூர கொலை!

Author: Hariharasudhan
13 November 2024, 11:11 am

சென்னை திருவொற்றியூரில், மாமூல் தர மறுத்ததால் பெண் வியாபாரியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை, திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் மாரி (55). இவரது மனைவி கௌரி (50). இவர்கள் இருவரும் அதே பகுதியில் சாலை ஓரமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று (நவ.12) மாலை இவர்களது கடைக்கு ஒருவர் வந்து உள்ளார்.

அவர் திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மனைவி கௌரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், கணவர் மாரிக்கு தலை மற்றும் கையில் கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே, தம்பதியை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், இது குறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

ACCUSED

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பிடித்து வைக்கப்பட்டு இருந்த நபரைக் கைது செய்தனர். மேலும், உயிரிழந்த கௌரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், பலத்த காயம் அடைந்த மாரியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மாயமான கள்ளக்காதலி… 2 நாள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி : அரங்கேறிய நாடகம்!

இதனையடுத்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கௌரியையும், மாரியையும் வெட்டிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (52) என்ற பர்மா சேகர் என்பதும், கௌரிக்கும், சேகருக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளன்று, மதுபோதையில் கடைக்கு வந்த சேகர், கெளரியிடம் மாமூல் கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும், சேகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 251

    0

    0