கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த கென்யா நாட்டு இளம்பெண் : கோவையில் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2024, 2:51 pm
கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு மெதாம்பெட்டமின் போதை மருந்து சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த மருந்து உட்கொள்பவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், தூக்கமே வராது. மீண்டும் தூக்கம் வர கஞ்சா உள்ளிட்ட போதைகளையும் பயன்படுத்தி வந்தனர்.
கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து செயல்பட்ட கும்பலை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் தலைமையில், துணை ஆணையர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேரை கைது செய்தனர். கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய 6 பேரிடம் இருந்து 102 கிராம் மெதாம்பெட்டமின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமார், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடத்தி வந்து சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே(வயது26) என்ற பெண் என்று தெரியவந்தது.
இவர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரது கூட்டாளி உகாண்டா நாட்டை சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க சென்றபோது கோவை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து கோவை கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கைதான கென்யா பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்ட கல்வி படிப்பதற்காக தங்கி உள்ளார். படிப்பை முடிக்கவில்லை. மேலும் அவரது விசாவும் காலாவதியாகி உள்ளது. தொடர்ந்து தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு போதை மருந்து சப்ளை செய்துள்ளார்.
உகாண்டா நாட்டை சேர்ந்த அவரது கூட்டாளி காவோன்கே சிறையில் இருந்து கொண்டே போன் மூலம், வரும் தகவலின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு கென்யா பெண் போதை மருந்தை அனுப்பி வைத்துள்ளார்.
நேரடியாக கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு, போதை மருந்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை லோகேசன் மூலம் அனுப்பி எடுத்துக்கொள்ளச்செய்வார். வாங்க வருபவர்கள் செல்போன் லொகேசன் அடிப்படையில் சென்று அங்கு ரகசியமாாக வைக்கப்பட்டு இருக்கும் போதை மருந்தை எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டு இருப்பதாக கைதான கென்யா பெண் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
இதில் கிடைக்கும் பணத்தை, கென்யா பெண் இவி பொனுகே, உகாண்டா நாட்டை சேர்ந்த மற்றொரு நண்பரான டேவிட் என்பவர் டெல்லியில் தொடங்கி இருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: விளையாடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்.. எமன் வடிவில் வந்த மழை.. மதுரையில் பரிதாபம்!
இந்த கணக்கில் ரூ.49 லட்சம் இருந்துள்ளது. அதனை முடக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பெங்களூரு சிறையில் இருந்து கொண்டே போதை மருந்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வரும் காவோன்கே என்பவரை கர்நாடக போலீஸ் மூலம் கைது செய்யவும் கோவை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான கென்யா பெண் உள்பட 3 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.