’ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை’.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு அறிக்கை!

Author: Hariharasudhan
9 December 2024, 6:43 pm

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை என விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரம் கைகள் மறைத்தாலும், ‘அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன்.

எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன்.

Aadhav arjuna about his suspension  by Thirumavalavan

நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.

தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

இதையும் படிங்க: ஓசி குழம்புக்காக DRAMA : உணவக உரிமையாளரை உணவு பாதுகாப்பு துறையில் சிக்க வைத்த நபர்..!!

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பாக, ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன்.

கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம்.

மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன்.

அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம்.

எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Aadhav arjuna about his suspension  from VCK

முன்னதாக, தனியார் பதிப்பகம் நடத்திய அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும், கருத்தியல் தலைவர் வேண்டும், பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது, அதிகாரத்தில் பங்கு உள்ளிட்டவை குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், இன்று ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இவ்வாறு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 120

    0

    0

    Leave a Reply