விஜய் விழாவுக்கு போகக்கூடாது’.. ஆதவ் அர்ஜுனா கைகாட்டிய முக்கியப்புள்ளி!

Author: Hariharasudhan
14 December 2024, 12:53 pm

விஜய் கலந்துகொள்ளும் புத்தக வெளியீட்டிற்குச் செல்லக்கூடாது என அமைச்சர் எ.வ.வேலு கூறியதாக விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னை: வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna), தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்து உள்ளார். அதில் பேசிய அவர், “திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவைச் சந்தித்தேன். அப்போது, நீங்கள் சென்றால் (அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழா) கூட்டணிக்கே பிரச்னை ஆகிவிடும்போல் தெரிகிறது, எனவே நீங்கள் செல்லாதீர்கள் என்றார்.

அந்த அமைச்சரின் கருத்தை திருமாவளவன் (Thirumavalavan) உள்வாங்குகிறார். பின்னர், என் கருத்தையும் அவர் உள்வாங்குகிறார். ஊடகங்கள் திருமாவளவனை மட்டுமே டார்கெட் செய்தவாறு இருக்கிறது. அவரது தலைமையை நோக்கி டார்கெட் செய்தவாறே இருக்கின்றன.

Aadhav Arjuna about DMK Minister EV Velu would Pressure in Ambedkar book event

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார், புத்தக வெளியீட்டு விழாவிற்குச் செல்ல வேண்டாம் என எ.வ.வேலு, திருமாவளவனிடம் சொன்னார். இந்தப் புத்தகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டபோது, அவரும் நானும் பல ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளோம். உங்களுக்கு திருமணத்திற்கு, உங்களது தந்தையை யாராவது வர வேண்டாம் எனச் சொன்னால் அவர்கள் மீது உங்களது கோபம் திரும்பாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா, தன் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் எப்போது ஒரு பேட்டி அளித்தாரோ, அன்றில் இருந்தே திமுக என்னை டார்கெட் செய்யத் தொடங்கி விட்டார்கள்” எனவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகர் காலமானார்.. அதிர்ச்சியில் கட்சியினர்!

நடந்தது என்ன? கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, தனியர் மாத இதழின் பதிப்பகத்தின் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் (TVK Vijay) கலந்து கொண்டு வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தரப்பில் விசிக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அப்போது, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராகி விடக்கூடாது, கருத்தியல் தன்மை கொண்ட தலைவர் ஆள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

Aadhav Arjuna about DMK Pressure on Ambedkar book event with TVK Vijay

அதேநேரம், திருமாவளவனுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருந்தால் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவர் பங்கேற்க முடியாமல் போயிருக்கும் என்ற கருத்தை விஜய் முன்வைத்தார். ஏனென்றால், இந்த நிகழ்ச்சியில் முன்னதாக திருமாவளவன் பங்கேற்க இருந்தது.

இந்த நிலையில், இந்தப் பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, திமுக – விசிக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவியது. இதனையடுத்து, 6 மாத காலத்திற்கு விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!