கம்பளம் விரித்த விஜய்.. திடுக்கிட்ட திருமா.. ஆதவ் அர்ஜுனாக்கு முக்கிய பொறுப்பு?
Author: Hariharasudhan30 January 2025, 11:15 am
விஜயுடன் சந்திப்பு நடத்தியுள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் தானாகவே விலகினார். இந்த நிலையில், விஜயை ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார்.
இதன்படி, சென்னையின் பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை, ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைய இருப்பதாகவும், அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியாகச் செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக, ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜூனா செயல்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தவெகவின் வியூக அமைப்பு பணிகளைச் செய்து வந்த ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் செயல்பாடுகளை விமர்சித்த ஜான் ஆரோக்கியசாமி, தவெக இரண்டு சதவீத வாக்குகளைத்தான் வாங்கும் என்று பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது என்பதும் நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: திருநங்கைகள் தொல்லை தாங்க முடியல… கதறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!
இந்த நிலையில், விஜய் – ஆதவ் அர்ஜுனா சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆதவ் அர்ஜூனா விஜயைச் சந்தித்தார் என்பது உண்மை. அதை வைத்துக்கொண்டு, அவர் விஜய் கட்சியில் இணையப் போகிறார், அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்போகிறார்கள் என்பதெல்லாம் யூகங்களே. எப்படியிருந்தாலும், அவர் விஜயுடன் சேர்ந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், திமுகவின் அழுத்தம் காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை எனக் கூறினார். அதனை ஆதரிக்கும் வகையிலே ஆதவின் பேச்சும் இருந்தது. இந்த நிலையில், விஜயுடன் இயங்குவது மகிழ்ச்சி என திருமாவளவன் கூறியிருப்பது, மீண்டும் கூட்டணிக்கு கொக்கியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.