2 ஆண்டுகளுக்கு பிறகு குமரியில் குவிந்த கூட்டம்… ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடிய மக்கள்…!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 11:09 am
Quick Share

குமரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று பல்லாயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால், ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வேத விற்பன்னர் மூலம் எள், பச்சரிசி, பலி தர்ப்பை புல், பூ போன்றவையுடன் பலி கர்ம பூஜை என்ற தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல் புரோகிதர்கள் 200க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களை அழைத்து அவர்களுக்கு பரிகார பூஜைகளை செய்து கொடுத்து வருகின்றனர். இதனால், கன்னியாகுமரி கடற்கரை பகுதி பரபரப்பாவை காணப்படுகிறது. அதிகாலை முதலே சூரிய உதயத்திற்கு முன்பு இருந்தே கன்னியாகுமரி கடற்கரைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியானது பிரசித்தி பெற்றது. ஆகவே, கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தினால் நடைபெறாமல் இருந்த நிகழ்வு இன்று நடைபெறுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரையில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1013

    0

    0