ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாரிவேட்டை.. தடையை மீறி முயல்வேட்டையில் ஈடுபட்ட 46 பேர் கைது… வேட்டை நாய்களும் பறிமுதல்…!!
Author: Babu Lakshmanan3 August 2022, 1:25 pm
பழனி அருகே தொப்பம்பட்டி பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டை நாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து பழனி வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒரு சமூகத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும் ஆண்டுதொறும் பாரிவேட்டையில் ஈடுபடுவதும், இந்த ஆண்டு பழனி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
பாரிவேட்டையில் வேட்டையாடப்படும் முயல்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் திருக்கோவிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் தெரியவந்தது. தொடர்ந்து 26 வேட்டை நாய்களுடன் 46பேரை கைது செய்த வனத்துறையினர் பாரிவேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்றும், இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர்.