விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகம் : விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு போட்ட ‘செம ப்ளான்’!!
Author: Udayachandran RadhaKrishnan3 August 2022, 4:11 pm
தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ‘அம்மா குடிநீர் பாட்டில்’ விற்கப்பட்டது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தினர். பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, இத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்னை தலைமை செயலகத்தில் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 28 இடங்களில் ஆவின் பால் தயாரிக்கும் யூனிட் உள்ளது. அங்கு வாட்டர் பிளாண்ட் இருப்பதால் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
தற்போது வாட்டர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம். ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 28 லட்சமாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.