‘போர்டு வச்சு, போன் நெம்பர் போட்டு மணல் கடத்த முடியுமா?’: இணையத்தில் வைரலான விளம்பர பலகையின் பின்னணி இதுதான்..!!
Author: Rajesh11 April 2022, 3:23 pm
கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஓர் மணல் சப்ளையர்ஸ் கடை பெயர் பலகையில் ‘கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் வாசு மணல் சப்ளையர்ஸ் என்ற பெயரில் ஒரு கடை இயங்கி வருகிறது. கட்டடங்களுக்குத் தேவையான மணல், செங்கல், எம்-சாண்ட், ஜல்லி, சிமென்ட் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அந்தக் கடை பெயர் பலகையில், ‘கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சமூகவலைதளங்களில் வைரலாகி ‘இப்படி வெளிப்படையாக மண் கடத்தி விற்கலாமா?’ என்று கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், இதுகுறித்து, வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்தினர் கூறும்போது, ‘எங்க ஏரியால ஒரு கட்டடத்தை இடிச்சப்புறம் அங்க இருக்கற மண்ணை, இன்னொரு இடத்துக்கு கொண்டு போறதை கடத்தல் மண்ணு சொல்லுவாங்க. மக்களும், ‘2 லோடு கடத்தல் மண் எடுத்துட்டு வந்து வீட்டு முன்னாடி போடுங்கனு சொல்லுவாங்க.
ஆகாத மண், பயன்படுத்தின மண்ணை சேறு ஆக்கூடாதுனு வீட்டு முன்னாடியும், மாடு கட்டற இடம், பழைய கிணற மூடறதுக்கு எல்லாம் போடுவாங்க. அதுக்கு பேர்தான் கடத்தல் மண். எங்க மாப்பிள்ளை தான் முன்னாடி கடை வெச்சுருந்தார். அவர் கிட்ட இருந்து இப்பத்தான் நாங்கக் கடைய வாங்கினோம். அப்ப இருந்தே இப்படித்தான் வெச்சுருக்கோம். நம்ம ஊர்ல பேச்சு வாக்குல இதைத்தான் கடத்தல் மண்ணு சொல்லுவாங்க.
இதை யாரோ போட்டோ எடுத்து கடத்தல் பண்றோம்னு போட்டுட்டாங்க. இப்ப இருக்கற சூழ்நிலைல யாராவது போர்டு வெச்சு, நம்பர்லாம் போட்டு மண் கடத்த முடியுமா சார்?என்றனர்.