வெடித்துச் சிதறிய போயிங் விமானம்.. 62 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!
Author: Hariharasudhan29 December 2024, 9:54 am
போயிங் 737 ரக விமானம், தென் கொரியாவில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியதில் இத்வரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சியோல்: தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து, தென் கொரியா நோக்கி, போயிங் 737 விமானமான, ஜெரு ஏர் விமானம் 2216, 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம், தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையறங்க தயாரானது.
ஆனால், திடீரென விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வரத் தொடங்கியது. இதனையடுத்து, திடீரென சறுக்கிய விமானம், விமான நிலைய வேலி மீது மோதியுள்ளது. அப்போது, விமானம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து, மீட்புப் படையினர் ஓடுதளத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, ஒரு ஊழியர் மற்றும் ஒரு பயணி என இருவர் உயிருடன் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பழுதே விமானம் ஓடுதளத்தில் இறங்கி சரி வர ஓட முடியாமல் போனதற்கு காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமான விபத்து தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு தென் கொரியாவின் பொறுப்பு அதிபர் சோய் சுங்க் மாக் உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: கதறும் கங்காரு பாய்ஸ்…வரலாற்று சாதனை படைத்த நிதிஷ் ரெட்டி…ஆனந்த கண்ணீரில் தந்தை..!
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கஜகஸ்தானில் விமானம் விபத்தில் சிக்கியது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எம்ப்ரேயர் 190’ ரக பயணிகள் விமானமான அது, ஐரோப்பிய நாடான அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவிற்குச் சென்றது. அப்போது, விமானம் கீழே இறங்கும் போது விழுந்து நொறுங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர்.