போலீஸ் லத்தியாலே போலீசுக்கு அடி.. ராஜபாளையத்தில் பயங்கரம்.. தீவிர தேடுதல் வேட்டை!

Author: Hariharasudhan
16 November 2024, 2:57 pm

ராஜபாளையத்தில் விசாரிக்கச் சென்ற காவலர்களை லத்தியால் தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே இருக்கும் நேரு சிலை அருகில் உள்ள டாஸ்மாக்கில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரைத் தாக்கி உள்ளனர்.

இதனால் காயம் அடைந்த இசக்கி, ரத்தக் காயங்களுடன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், இசக்கியைத் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில், அவர்கள் நேரு சிலை பின்புறம் இருக்கும் மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்தது தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, அவர்களிடம் விசாரித்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர், மறுநாள் காலை அந்த கும்பலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தக் கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

RAJAPALAYAM POLICE ATTACKS

ஒரு கட்டத்தில், காவலர் கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி அவரையேத் தாக்க தொடங்கி உள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற மற்றொரு காவலரையும் அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு காயம் அடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: என் பேரே இல்லை.. மருமகனின் விளக்கம்.. மாமனாருக்கு தொடரும் ரெய்டு.. ED சோதனையில் சிக்கியது என்ன?

மேலும், இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கீழ ஆவரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா மற்றும் பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, பலரது கண்டனத்திற்கும், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் கருத்துகளைப் பெற்று வருகிறது.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!