சென்னை இரட்டைக் கொலை.. 4 வருடங்கள் கழித்து டெல்லியில் சிக்கிய டைல்ஸ் தொழிலாளி!
Author: Hariharasudhan4 February 2025, 11:58 am
சென்னையில், இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் சென்று தலைமறைவான பீகார் நபரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மாயாண்டி (62) – வள்ளிநாயகி (60) தம்பதி. இவர்கள் இருவரும், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் திருடுபோனது.
பின்னர், இந்தக் கொலை தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், நகை மற்றும் பணத்திற்காக இரட்டைக் கொலை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதனைச் செய்தது, மாயாண்டி வீட்டில் டைல்ஸ் வேலை செய்துவந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கம்ரூல் ஆலம்(38) என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஆலமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த ஆலம், விசாரணைக்காக மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, துரைப்பாக்கம் போலீசார் மற்றும் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த ஆலமை, போலீசார் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்துள்ளனர். பின்னர், அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? – அண்ணாமலை கேள்வி!
மேலும், இது தொடர்பான விசாரணையில், கடந்த நான்கு ஆண்டுகளாக போலி முகவரி மற்றும் மாறுவேடத்தில் டெல்லியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆலம் குடும்பமாக வசித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.