அரசுப் பேருந்தும், லாரியும் மோதி பயங்கரம்… 22 பயணிகளுடன் வந்த AC பேருந்தில் பற்றி எரிந்த நெருப்பு… …. திருவள்ளூரில் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan29 July 2023, 2:25 pm
பூவிருந்தவல்லி அருகே கர்நாடக அரசு பேருந்தும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது.
கர்நாடக மாநிலம் தும்பகால என்ற பகுதியில் இருந்து கர்நாடக அரசு A/C பேருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்து கொண்டு இருந்தது. சுமார் 22 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்பூவிருந்தவல்லி அருகே வேலப்பன்சாவடி சந்திப்பை கடக்கும் போது, திருவேற்காடு சாலைக்கு திரும்பி கொண்டு இருந்த செங்கல் லோடு லாரி மீது மோதியது.
இதில் பேருந்தில் வந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பற்ற துவங்கியது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே வரத் துவங்கினர். இதனை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் அவர்களுக்கு உதவி செய்து உடனடியாக அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து அருகே இருந்த லாரியிலும் பரவியது. இரண்டு வாகனங்களும் கரும் புகையுடன் எரிய துவங்கியது. இதனிடையே தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். தீவிபத்து காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து சாலை நடுவே விபத்தில் சிக்கி எலும்பு கூடாக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பேருந்து ஓட்டுநர் வில்சன், லாரி ஓட்டுநர் முனி ஆகியோரிடம் ஆவடி போக்குவரத்து காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.