ஓவர் டேக் எடுத்த போது விபத்து : பைக் மீது நேருக்கு நேர் மோதிய கார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2022, 5:04 pm
கோவை : ஓவர் டேக் செய்ய முயன்ற கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில் ஆபத்தான நிலைமையில் வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மணிகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். சம்பவத்தன்று கணபதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனம் கணபதி அருகே உள்ள தனியார் பள்ளியை கடக்கும் போது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் கணபதி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் ஒன்றை ஓவர்டேக் செய்ய முயன்றதும், அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளன.
இந்த விபத்தில் ராமசுப்பிரமணியத்திற்கு தோள்பட்டை மற்றும் கால் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை ஓட்டி வந்த அன்னூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.